< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தி 2 வாரங்களுக்குள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் - நிபுணர்கள் கருத்து
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி 2 வாரங்களுக்குள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் - நிபுணர்கள் கருத்து

தினத்தந்தி
|
8 Jun 2024 8:17 AM IST

ராகுல் காந்தி வயநாடு அல்லது ரேபரேலியில் ஏதாவது ஒரு தொகுதியை 2 வாரங்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் அவர் அமோக வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் அவர் 2 தொகுதிகளில் ஏதாவது ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அது வயநாடா அல்லது ரேபரேலியா என்பது பற்றி இன்னும் உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து நாடாளுமன்ற முன்னாள் பொதுச் செயலாளரும், அரசியலமைப்பு நிபுணருமான பி.டி.டி.ஆச்சாரி கூறுகையில், 2 தொகுதிகளில் வெற்றி பெறும் எந்தவொரு வேட்பாளரும், தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் ஒரு தொகுதியை கைவிட வேண்டும்.

17-வது நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகும், 18-வது நாடாளுமன்ற இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பதால், தற்போதைய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பலாம். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகள் காலியாக இருந்தால், ராஜினாமா கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பலாம். ஒரு உறுப்பினர் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்யத் தவறினால், அவர் இரண்டு தொகுதிகளையும் இழக்க நேரிடும். புதிய மக்களவையில் காங்கிரஸின் எண்ணிக்கை 99 ஆக உள்ளது. ராகுல்காந்தி ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் பட்சத்தில், இந்த எண்ணிக்கை 98-ஆக குறையும்.

மேலும் செய்திகள்