< Back
தேசிய செய்திகள்
எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் - காங்கிரஸ் உறுதி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் - காங்கிரஸ் உறுதி

தினத்தந்தி
|
19 Jun 2023 3:48 AM IST

பாட்னாவில் 23-ந்தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பதை காங்கிரஸ் கட்சி உறுதி செய்துள்ளது.

பாட்னா,

அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

இது தொடர்பாக ஏற்கனவே டெல்லி சென்று காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரையும் சந்தித்தார்.

இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் அடுத்தகட்டமாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் ஒன்று பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 23-ந்தேதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பீகார் காங்கிரஸ் தலைவர்

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் என கூறிய நிதிஷ்குமார், பிரதிநிதிகளை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு இருந்தார்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் அவர் பங்கேற்க வாய்ப்பு இல்லை எனவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனவே கட்சியின் பீகார் மாநில தலைவர் அகிலேஷ் சிங்கிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

ராகுல் காந்தி பங்கேற்பார்

அப்போது அவர், 'பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மற்றொரு மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் பங்கேற்பார்கள்' என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பது தொடர்பாக சில ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்ததை பார்த்ததாக தெரிவித்த அகிலேஷ் சிங், அந்த தகவல்கள் ஆதாரமற்றவை என்றும், இது வேண்டுமென்றே பரப்பப்படுவதாகவும் கூறினார்.

தேசிய அளவில் எதிர்க்கட்சித்தலைவர்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று அவர் உறுதிபட கூறினார்.

மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி

இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தியின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்சா), டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்