< Back
தேசிய செய்திகள்
மக்களவையில் சபாநாயகரைவிட பெரியவர் என யாருமில்லை! - ராகுல் காந்தி
தேசிய செய்திகள்

"மக்களவையில் சபாநாயகரைவிட பெரியவர் என யாருமில்லை!" - ராகுல் காந்தி

தினத்தந்தி
|
1 July 2024 8:10 PM IST

பிரதமர் மோடி முன்பு ஓம் பிர்லா தலைவணங்கியது குறித்து எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.

புதுடெல்லி,

மக்களவையில், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின் மக்களவையில் முதல் முறையாக பேசிய ராகுல்காந்தி, "கடந்த 10 ஆண்டுகளாக கடுமையான தாக்குதலுக்கு அரசியல் சாசனம் உள்ளானது. இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மக்களவையில் எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமையே.

கடந்த 10 ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. எனது எம்.பி. பதவியையும், வீட்டையும் பா.ஜனதா அரசு பறித்தது. பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். ஊடகங்கள் வாயிலாக என் மீது தொடர் தாக்குதல் நடந்தது.

கடவுள் சிவபெருமானின் படத்தை காங்கிரஸ் காட்டியதால் சிலருக்கு கோபம் வந்திருக்கும். கடவுளிடமே நேரடியாக பேசக்கூடியவர் பிரதமர் மோடி. சிவனின் திரிசூலம் என்பது வன்முறைக்கானது அல்ல, அகிம்சைக்கானது. மக்களவையில் சிவன் படத்தைக்காட்ட அனுமதி இல்லையா? (சிவன், குருநானக் படங்களை ராகுல்காட்டிய நிலையில் அதற்கு அனுமதி இல்லையென சபாநாயகர் கண்டிப்புடன் தெரிவித்தார்) அரசமைப்பை நாங்கள் பாதுகாத்துள்ளோம். அதிகாரத்தை விட மேலானது ஒன்று இருக்கிறது. அதிகாரத்தை விட உண்மையை நம்புபவன் நான்.

இந்துக்கள் என தன்னை கூறிக்கொள்பவர்கள் வன்முறை வெறுப்பு குறித்து மட்டுமே பேசுகின்றனர். பிரதமர் மோடியோ, பா.ஜனதாவோ இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல.

சபாநாயகர் நாற்காலியில் அமர சென்றபோது நானும் அவருடன் சென்றேன். மக்களவையின் இறுதி நடுவர் நீங்கள். உங்களின் பேச்சுதான் இந்திய ஜனநாயகத்தை வரையறுக்கிறது. அந்த நாற்காலியில் நீங்கள் அமர்கையில் நான் உங்களுக்கு கைக்கொடுத்தேன். அப்போது பதிலுக்கு நீங்கள் எனக்கு நேராக நின்று கைக்கொடுத்தீர்கள். ஆனால் மோடி உங்களுக்கு கைக்கொடுக்கும்போது தலைவணங்கி கைக்கொடுத்தீர்கள். சபாநாயகர் இப்படி தலைவணங்கி வணக்கம் சொல்வது ஏன்?" என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, "பெரியவர்கள் முன்பணிந்தும், சமமானவர்களுக்கு கைக்குலுக்கவும் எனது கலாச்சாரம் சொல்லிக் கொடுத்துள்ளது" என்று பதிலளித்தார்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, "உங்கள் வார்த்தையை நான் மதிக்கிறேன். ஆனால் இந்த சபையில் சபாநாயகரைவிட பெரியவர் என யாரும் இல்லை" என்று கூறினார்.

மேலும் செய்திகள்