மணிப்பூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்; நிகழ்ச்சி பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்ல முடிவு
|மணிப்பூரில் ராகுல் காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், நிகழ்ச்சி பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்ல அவர் முடிவு செய்து உள்ளார்.
இம்பால்,
மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மணிப்பூர் சென்றார். எனினும், மணிப்பூரின் சுராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியை பிஷ்ணுப்பூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மணிப்பூர் காவல்துறை தடுத்து நிறுத்திய நிலையில், ராகுல் காந்தி இம்பால் நகருக்கு திரும்பினார்.
அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, கலவரம் நீடித்து வரும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது தான் முதன்மையானது. ஒற்றுமையாக இருப்பதே நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தும் என்றார்.
இதனை தொடர்ந்து, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அவர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்ல முடிவு செய்து உள்ளார்.
போலீசார் எங்களை ஏன் தடுத்து நிறுத்தினர் என எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அக்கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியுள்ளார்.
மணிப்பூரில் கலவரம் பரவியதில் இருந்து, 300-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 50 ஆயிரம் பேர் வரை தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.