சாவர்க்கர் பற்றி அவதூறு பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: மத்திய மந்திரி நிதின் கட்காரி வலியுறுத்தல்
|சாவர்க்கர் பற்றிய பேச்சுக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென மத்திய மந்திரி நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார்.
நாக்பூர்,
சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கெஞ்சியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறி வந்தார்.
அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, என்னுடைய பெயர் காந்தி" என்று கூறினார். இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் மராட்டியத்தில் பா.ஜனதாவும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியும் சாவர்க்கர் கவுரவ யாத்திரையை தொடங்கியது.
நாக்பூரில் நடந்த இந்த யாத்திரையில் கலந்துகொண்ட மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சில தவறான புரிதல் காரணமாக இந்துத்வா தலைவரான சாவர்க்கரை பற்றி விமர்சித்துள்ளார். சாவர்க்கரை அவமதிக்க அவருக்கு உரிமை கொடுத்தது யார்?. அவ்வாறு அவமதிப்பதை யாரும் சகித்து கொள்ள மாட்டார்கள்.
எனவே சாவர்க்கர் பற்றிய பேச்சுக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்காக அவர் நிச்சயம் பெரிய மனதை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.