மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானி நிறுவன முறைகேடுகள் குறித்து விசாரணை - ராகுல் காந்தி உறுதி
|மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானி நிறுவன முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்தார்.
புதுடெல்லி,
தொழிலதிபர் அதானியின் நிலக்கரி நிறுவனங்கள் சந்தை விலையை விட பல மடங்கு அதிகமாக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
இதனால் இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரித்து, அதன் மூலம் லட்சக்கணக்கான நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்சாரத்துக்கு அதிக கட்டணம் செலுத்த வழிவகுத்து உள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது.
ஏற்கனவே அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் முறைகேடு புகார் கூறியிருந்த நிலையில், தற்போதைய புதிய புகார் மேலும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இந்த முறைகேடு மூலம் 2 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு அதானி நிறுவனங்கள் கொள்ளை அடித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக பிரதமர் மோடியை மீண்டும் அந்த கட்சி சாடியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தெரிவித்தார். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, அதானி நிறுவனம் குறித்து வெளியான செய்தியின் நகலை நிருபர்களிடம் காட்டி அவர் கூறியதாவது:-
இந்த செய்தி நிறுவனம் ஒரு பெரிய செய்தியைக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் எந்த அரசையும் வீழ்த்தும். இது ஒரு மனிதனின் (அதானி) நேரடி திருட்டு. அவர் பிரதமரால் மீண்டும் மீண்டும் பாதுகாக்கப்படுகிறார். அதானி நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? நான் பிரதமருக்கு உதவவே செய்கிறேன். இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கி அவரது நம்பகத்தன்மையை காக்குமாறுதான் கேட்கிறேன்.
அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதிக்கு அதிக விலையை கொடுத்து ரூ.12,000 கோடி அளவுக்கு மக்கள் பாக்கெட்டில் இருந்து எடுத்து இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தோனேசியாவில் இருந்து அதிக விலைக்கு வாங்கப்பட்ட நிலக்கரி, இந்தியா வரும்போது அதன் விலை இரட்டிப்பாகி இருக்கிறது. நிலக்கரியின் இந்த அதிகப்படியான விலைப்பட்டியல் நாட்டில் மின்சார கட்டணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் நுகர்வோர் அதிக மின் கட்டணங்களை செலுத்த வழிவகுத்தது.
இதனால் காங்கிரஸ் ஆளும் சில மாநிலங்கள் ஏழைகளுக்கு மானியங்களை செலுத்த வேண்டியிருந்தது. கர்நாடகாவில் மின்சார மானியம் கொடுக்கிறோம், மத்தியப் பிரதேசத்தில் வழங்கப் போகிறோம். இந்திய மக்களிடம் அதானி நேரடியாகத் திருடுகிறார். இதை பிரதமர் ஏன் தடுக்கவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை. பிரதமரின் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடக்காது. ஏன் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் கேள்வி?
2024-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்த முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும். இது தொடர்பாக விரிவாக விசாரிக்கப்படும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
இந்தியா கூட்டணியில் அதானியை ஆதரிக்கும் சரத்பவாரிடம் இது குறித்து கேட்டீர்களா? என ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், 'சரத்பவார், இந்தியாவின் பிரதமர் இல்லை. அவர் அதானியை பாதுகாக்கவும் இல்லை. மோடிதான் அதை செய்கிறார். எனவேதான் அவரிடம் நான் இந்த கேள்வியை கேட்கிறேன். இந்திய பிரதமராக சரத்பவார் இருந்தால், அதானியை அவர் பாதுகாத்தால், அப்போது நான் அவரிடம் இந்த கேள்வியை கேட்பேன்' என்று தெரிவித்தார்.