டெல்லியில் தேசிவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் ராகுல் காந்தி சந்திப்பு
|காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சரத் பவாரை நேரில் சென்று சந்தித்து பேசினார்.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் நேற்று இணைந்தனர். தொடர்ந்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சரத் பவாரின் இல்லத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று சரத் பவாரை சந்தித்து பேசினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து சரத் பவாரிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி, தனது ஆதரவை சரத் பவாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே உடன் இருந்தார்.
இதன் பிறகு சரத் பவார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், 83 வயதாகியும் அரசியலில் இருந்து ஓய்வு பெறாதது ஏன் என அஜித் பவார் உள்ளிட்டோர் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சரத் பவார், "62 ஆக இருந்தாலும், 82 ஆக இருந்தாலும் நான் எப்போது சுறுசுறுப்பாக இருக்கிறேன்" என்று சரத் பவார் பதிலளித்தார்.