ராஞ்சியில் ஹேமந்த் சோரனின் மனைவியை சந்தித்தார் ராகுல் காந்தி
|சம்பாய் சோரன் இன்று நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார்.
அதேவேளை, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 31ம் தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, ஜார்க்கண்ட் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார்.
சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டு இருந்தார். கவர்னரின் உத்தரவுப்படி, ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சம்பாய் சோரன் பெரும்பான்மையை காட்டினார். அதாவது ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக 47 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதையடுத்து சம்பாய் சோரன் நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றார்.
"என் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து விலகுவேன். என் மீதான நடவடிக்கையில் 'கவர்னர் மாளிகைக்கு' தொடர்பு உள்ளது" என்று ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதத்தின்போது தெரிவித்தார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எச்.இ.சி. வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஷாஹீத் மைதானத்தில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட்டின் முன்னாள் முதல்-மந்திரியின் மனைவி கல்பனா சோரனை சந்தித்ததாக காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.