ராகுல் காந்தி சிங்கம் அல்ல.. அவர் ஒரு காகிதப் புலி..!! - சந்திரசேகர ராவ் மகள் விமர்சனம்
|ராகுல் காந்தி சிங்கம் அல்ல.. அவர் ஒரு காகிதப் புலி என்று சந்திரசேகர ராவின் மகள் கவிதா விமர்சனம் செய்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 30-ந் தேதி நடக்கிறது. டிசம்பர் 3-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இதில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த சூழலில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி, "சந்திரசேகர ராவ் இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவுவார். இந்த பத்து ஆண்டு கால ஆட்சியில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தொடர்ந்து மக்களிடமிருந்து விலகியே நின்றிருக்கிறார். மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி சிங்கம் அல்ல.. அவர் ஒரு காகிதப் புலி என்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பெசிய அவர், "ராகுல் காந்தி சிங்கம் அல்ல.. அவர் ஒரு காகிதப் புலி. அவர் யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே படித்துவிட்டுப் போவார். உள்ளூர் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள மாட்டார். இந்தப் பிராந்தியத்தின் உள்ளூர் மரபுகள், கலாசாரத்தை அவர் மதிக்கவில்லை.
மாநிலத்தில் உள்ள மக்கள் தங்கள் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை அறிந்திருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் அதற்காக போராடியுள்ளனர். தெலுங்கானா அரசியல் விழிப்புணர்வை அதிகம் கொண்ட மாநிலம், ஏனென்றால் நாம் நம் மாநிலத்திற்காக போராடினோம், நம் மாநிலத்திற்காக நம் உயிரைக் கொடுத்தோம்.
அடுத்தமுறை இங்கே வந்தால் தோசை கடைக்கு சென்று தோசை சாப்பிடாமல், இங்குள்ள மக்களைச் சந்தியுங்கள். அப்போதுதான் உங்களுக்கு தெலுங்கானா மக்களின் பிரச்சினை புரியும். இல்லாவிட்டால் உங்களுக்குப் புரியாது" என்று அவர் கூறினார்.