ராகுல் காந்தி ஒரு பக்குவப்படாத தலைவர்; மனதளவில் 5 வயதுக்கு உட்பட்ட நபர்: மத்திய பிரதேச முதல்-மந்திரி
|மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, ராகுல் காந்தி ஒரு பக்குவப்படாத தலைவராக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், லண்டன் நகரில், கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும்போது, இந்தியாவின் ஜனநாயகம் பற்றி பேசினார்.
இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றச்சாட்டாக கூறினார். பின்னர், லண்டன் நகரில் பேசும்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கூட, இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்படுவதற்கான எந்த விசயங்களையும் செய்யவில்லை. ஆனால், அவை இந்தியாவிடம் இருந்து வர்த்தகமும், பணமும் பெற்று கொள்கிறது என ராகுல் காந்தி பேசியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ராகுல் காந்தி ஒரு பக்குவப்படாத தலைவராக இருக்கிறார் என்று நான் நினைப்பது வழக்கம்.
அவர் மனதளவில் 5 வயதுக்கு உட்பட்டவரின் வயதுடையவராக இருப்பது போன்று காணப்பட்டது. ஆனால், இந்த முறை அந்நிய நிலத்தில் நமது நாட்டை பற்றி அவர் விமர்சித்த விதம்... அவர் ஓர் உண்மையான இந்தியர் கிடையாது.
அவர் இந்தியராக இருக்கிறாரா? என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளார். நான் அமெரிக்காவுக்கு சென்றபோது, நமது பிரதமராக மன்மோகன் சிங் அப்போது இருந்தபோது, என்னிடம், மன்மோகன் சிங் எதிர்பார்த்த அளவு செயல்பட தவறி விட்டாரா? என்று அவரை பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு நான், இல்லை என கூறுவேன். அவர் எங்களுடைய பிரதமர் மற்றும் எங்களுடைய பெருமைக்கு உரியவர் என பதிலளிப்பேன் என்று சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.