< Back
தேசிய செய்திகள்
அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமீன்
தேசிய செய்திகள்

அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமீன்

தினத்தந்தி
|
20 Feb 2024 1:59 PM IST

உள்துறை மந்திரி அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது.

லக்னோ,

கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக தேர்தலின்போது மத்திய மந்திரி அமித்ஷா குறித்து ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக பா.ஜ.க.வை சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி வழக்கு தொடர்ந்தார்.

பா.ஜனதா கட்சி நேர்மையான மற்றும் தூய்மையான அரசியலை நம்புவதாக கூறுகிறது. ஆனால் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கட்சி தலைவராக இருக்கிறார் என்று ராகுல் காந்தி கூறியதை புகாராக அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனிடையே ராகுல் காந்தி இன்று காலை நேரில் ஆஜராக உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில் உள்ள மாவட்ட சிவில் கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.

இதை தொடர்ந்து சுல்தான்பூர் கோர்ட்டில் இன்று ஆஜரான ராகுல் காந்தி, ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

முன்னதாக இந்த வழக்கை தொடர்ந்த பா.ஜனதா பிரமுகர் விஜய் மிஸ்ரா கூறும்போது, 'பா.ஜனதா நாட்டின் மிகப்பெரிய கட்சி. அதன் அப்போதைய தலைவரை கொலைகாரன் என்று அழைப்பது நியாயமற்றது' என்றார்.

மேலும் செய்திகள்