வெறுப்பு, வன்முறைக்கு எதிராக போராடும் ராகுல் காந்தி; தேவேகவுடா பாராட்டு
|வெறுப்பு, வன்முறைக்கு எதிராக போராடும் ராகுல் காந்தி என்று தேவேகவுடா பாராட்டு தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு:
ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை நிறைவு விழா காஷ்மீரில் இந்த மாத இறுதியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அகில இந்திய காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் ஜனதாதளம்(எஸ்) தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடாவுக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். அதற்கு தேவேகவுடா அவருக்கு பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி உயிர் நீத்த தினத்தன்று ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா நடைபெறுவது பொருத்தமானது. இந்த விழாவில் என்னால் கலந்து கொள்ள இயலாத நிலை உள்ளது. ஆனால் எனது வாழ்த்துக்கள் ராகுல் காந்திக்கு இருக்கிறது. அவர் நல்லிணக்க கருத்துகளை கூறி வெறுப்பு, வன்முறைக்கு எதிராக போராடுகிறார். 3,500 கிலோ மீட்டர் தூரம் அதாவது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வெற்றிகரமாக பாதயாத்திரை நடத்தி இருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.