< Back
தேசிய செய்திகள்
செபி தலைவர் ராஜினாமா செய்யாதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
தேசிய செய்திகள்

'செபி' தலைவர் ராஜினாமா செய்யாதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

தினத்தந்தி
|
12 Aug 2024 9:52 AM IST

எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய பங்குச் சந்தைக்கு ஆபத்து இருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச்சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து, அதானி குழும பங்குகளின் விலை சரிந்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமே (செபி) விசாரிக்கட்டும் என்று கூறியது.

2020-ம் ஆண்டில் இருந்து அதானி குழுமத்தின் 13 வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான புகார்கள் குறித்து விசாரித்து வருவதாக 'செபி' தெரிவித்தது. இதற்கிடையே, நிதி முறைகேட்டுக்காக அதானி குழுமம் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், 'செபி' தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகள் வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் நேற்று முன்தினம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. எனினும் 'இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; உள்நோக்கம் உடையவை' என, செபி தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்து உள்ளது.

செபி தலைவர் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சமூகவலைதளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: -எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இந்திய பங்குச் சந்தைக்கு ஆபத்து இருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவது எனது கடமை.

செபி தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடியா? செபி தலைவரா? அல்லது இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரிக்குமா?

நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என இப்போது புரிகிறது. சில்லறை முதலீட்டாளர்களின் செல்வத்தைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்ட செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கேள்விக்கு ஆளாகியுள்ளது" இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்