ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை 1,000 கி.மீட்டர் தூர மைல்கல்லை எட்டியது
|தமிழகத்தில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை 38-வது நாளில் பல்லாரிக்கு வந்தது. இந்த பாதயாத்திரை 1,000 கி.மீட்டர் மைல் கல்லை எட்டியது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள்.
பெங்களூரு:
தமிழகத்தில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை 38-வது நாளில் பல்லாரிக்கு வந்தது. இந்த பாதயாத்திரை 1,000 கி.மீட்டர் மைல் கல்லை எட்டியது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள்.
ராகுல்காந்தி பாதயாத்திரை
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்தியா ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி தமிழகத்தின் கன்னியாகுமாரியில் தொடங்கினார். அங்கிருந்து பாதயாத்திரையாக கேரள மாநிலத்திற்கு வந்தார். கேரளாவில் மட்டும் 19 நாட்கள் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். இதையடுத்து, கேரள பாதயாத்திரையை முடித்துவிட்டு கடந்த மாதம் 30-ந் தேதி ராகுல்காந்தியின் பாதயாத்திரை கர்நாடகத்தை வந்தடைந்தது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை மைசூரு, மண்டியா, துமகூரு வழியாக சித்ரதுர்கா மாவட்டத்திற்கு சென்றது. நேற்று முன்தினம் கர்நாடகத்தில் இருந்து ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஓபளாபுரம் பகுதிக்கு சென்றது. அங்கேயே ராகுல்காந்தி ஓய்வெடுத்தார். பின்னர் மாலையில் ஓபளாபுரத்தில் இருந்து 5½ கிலோ மீட்டர் காரில் பயணம் செய்து கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் ஹலகுந்திக்கு ராகுல்காந்தி வருகை தந்தார். இரவில் அங்கேயே அவர் தங்கினார்.
1,000 கி.மீட்டர் மைல்கல்
இந்த நிலையில், ராகுல்காந்தி தனது 38-வது நாள் பாதயாத்திரையை பல்லாரி மாவட்டம் ஹலகுந்தியில் உள்ள ஹலகுந்தி மடத்தில் இருந்து நேற்று காலை 6.30 மணியளவில் தொடங்கினார். காலை 9.30 மணியளவில் பல்லாரி கோர்ட்டு அருகே கம்மா பவனுக்கு ராகுல்காந்தியின் பாதயாத்திரை வந்தடைந்தது. சுமார் 8.8 கிலோ மீட்டருக்கு ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை நேற்று 38-வது நாளில் பல்லாரி கோர்ட்டுக்கு வந்தடைந்த போது, 1,000 கி.மீட்டர் மைல்கல்லை எட்டியது. மொத்தம் 3,500 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறும் இந்த பாதயாத்திரை நேற்று 1,000 கி.மீ. தூரத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி பல்லாரியில் நேற்று மதியம் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியுடன், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஸ் பாகேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பு
அதே நேரத்தில் பல்லாரி மாவடடம் ஹலகுந்தியில் நேற்று தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களும் பங்கேற்று இருந்தார்கள். குறிப்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே முதல் முறையாக ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்று இருந்தார். ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ராகுல்காந்தியுடன் அவர் பாதயாத்திரை மேற்கொண்டார்.
இதுதவிர அகில இந்திய காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்று இருந்தார்கள். இதன் காரணமாக மூத்த தலைவர்கள் மெதுவாக நடந்து சென்றதால், ராகுல்காந்தியும் வேகமாக நடந்து செல்லாமல் மெதுவாகவே நடந்து சென்றதை பார்க்க முடிந்தது.
உற்சாக வரவேற்பு
ராகுல்காந்தியை வரவேற்கும் விதமாக சாலைகளில் ஆங்காங்கே விதவிதமான பிரமாண்ட கோலங்கள் போடப்பட்டு இருந்தது. ஹலகுந்தியில் இருந்து தொடங்கிய பாதயாத்திரை ராய்ச்சூர் பழைய பஸ் நிலையம் வந்த போது, 20 நிமிடம் ராகுல்காந்தி ஓய்வெடுத்தார். ராகுல்காந்திக்கு வழிநெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேற்று மதியம் பல்லாரி கோர்ட்டுக்கு பாதயாத்திரை வந்த பின்பு ராகுல்காந்தி ஓய்வெடுக்க சென்ற போது, அங்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால், தள்ளுமுள்ளு உருவானது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தொண்டர்களை ஒழுங்குப்படுத்தினர்.
நாளை பாதயாத்திரை கிடையாது
நாளை (திங்கட்கிழமை) அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் பாதயாத்திரை நடைபெறாது என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.