மனைவிக்கு பணம் அனுப்பியதால் ஆத்திரம்... லிவ்-இன் பார்ட்னரின் அந்தரங்க உறுப்பை தாக்கிய பெண்
|மனைவிக்கு பணம் அனுப்பிய லிவ்-இன் பார்ட்னரின் அந்தரங்க உறுப்பை பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தொரகுடிப்படு என்ற கிராமத்தில் விஜய்குமார் யாதவ் என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். அவருடன் சீதா குமாரி என்ற பெண் வசித்து வந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும், கடந்த 4 மாதங்களாக லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதில் விஜய்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், அவர் தனக்கு கிடைத்த வருமானத்தை சொந்த ஊரில் வசிக்கும் தனது மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். இது சீதா குமாரிக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விஜய்குமாரிடம் அவர் பல முறை வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு விஜய் குமார் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அப்போது சீதா குமாரி அவரது கை, கால்களை கட்டி, அவரது அந்தரங்க உறுப்பில் கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் அவரது மொபைல் போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
மேலும் விஜய்குமார் தாக்கப்பட்டதாக வீட்டின் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அவர் சென்றுள்ளார். இதையடுத்து, விஜய்குமார் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.