தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்: 4 வயது குழந்தைக்கு சிகரெட்டால் சூடு வைத்த கொடூரம் - தாய், கள்ளக்காதலன் கைது
|தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக 4 வயது பெண் குழந்தைக்கு ஹீட்டர் மற்றும் சிகரெட்டால் சூடு வைத்த தாய், அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்கபெல்லபுரா மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவருடன் மஞ்சுளா தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் தகாத உறவுக்கு 4 வயது பெண் குழந்தை இடையூறாக இருப்பதாக கருதி அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மஞ்சுநாத், குழந்தைக்கு சிகரெட் மற்றும் ஹீட்டர் ஆகியவற்றால் சூடு வைத்துள்ளார். பின்னர் குழந்தையை அடிக்கும் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து குழந்தையை மீட்டு, இருவருக்கும் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் வந்த போலீசார் விசாரணைக்குப் பிறகு மஞ்சுளா மற்றும் அவரது ஆண் நண்பர் மஞ்சுநாத் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன், குழந்தைகள் நல அலுவலரிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.