காதலை கைவிட்டதால் ஆத்திரம்... பெற்றோர் கண்ணெதிரே இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து
|வாலிபரும் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரேயை சேர்ந்தவர் பவ்யா (வயது 25). இவர், கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது அவருக்கும், ராமாச்சாரி என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் பவ்யாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே ராமாச்சாரியுடன் உள்ள காதலை கைவிடும்படி பவ்யாவிடம் பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் ராமாச்சாரியுடன், பவ்யா, பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆயத்த ஆடை நிறுவனத்திற்கும் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கொரட்டகெரேயில் உள்ள பவ்யாவின் வீட்டுக்கு ராமாச்சாரி சென்றுள்ளார். அங்கு வைத்து பெற்றோர் முன்னிலையிலேயே பவ்யாவிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ெபற்றோர் கண்எதிரேயே பவ்யாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். உடனே ராமாச்சாரியிடம் இருந்து பவ்யாவை, அவரது பெற்றோர் மீட்டனர். பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த பவ்யாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பவ்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ராமாச்சாரியும் தனது கையை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த போலீசார், ராமாச்சாரியை கைது செய்தனர். அவர் குணமடைந்ததும் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் கொரட்டகெரேவில் பரபரப்பு ஏற்பட்டது.