< Back
தேசிய செய்திகள்
ரவீந்திரநாத் எம்.பி. பதவி செல்லாது என தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்
தேசிய செய்திகள்

ரவீந்திரநாத் எம்.பி. பதவி செல்லாது என தீர்ப்பு - சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்

தினத்தந்தி
|
11 July 2023 2:42 PM IST

ரவீந்திரநாத் எம்.பி. பதவி செல்லாது என ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வேட்பு மனுவில் சொத்துக்கள், வங்கி கடன் போன்ற விவரங்களை ரவீந்திரநாத் மறைத்துள்ளார் என்றும் பணப்பட்டுவாடா செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு, ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதால் அதுவரை இத்தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைஏற்று தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்ற ஐகோர்ட்டு உத்தரவு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க.வை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ரவீந்திரநாத் மேல் முறையீடு வழக்கில், தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று அம்மனுவில் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்து உள்ளார்.

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் ஒ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில், தங்க தமிழ் செல்வன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்