< Back
தேசிய செய்திகள்
வினாத்தாள் கசிவு விவகாரம்; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்:  ஜனாதிபதி திரவுபதி முர்மு
தேசிய செய்திகள்

வினாத்தாள் கசிவு விவகாரம்; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: ஜனாதிபதி திரவுபதி முர்மு

தினத்தந்தி
|
27 Jun 2024 2:19 PM IST

வினாத்தாள் கசிவுக்கு எதிராக, நாடாளுமன்றம் ஒரு வலிமையான சட்டம் இயற்றியிருக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு, 18-வது மக்களவையில் முதன்முறையாக இன்று உரையாற்றினார். அவர் பேசும்போது, நாட்டின் இளைஞர்கள் பெரிய விசயங்களை கனவு கண்டு, அதனை சாதிக்கும் வகையிலான ஒரு சூழலை உருவாக்க தன்னுடைய அரசு பணியாற்றி வருகிறது என பேசினார்.

அவர், கல்வி துறையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பற்றி குறிப்பிடும்போது, சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் நீட் தேர்வு என கூச்சலிட்டனர்.

இதன்பின்னர் அவர் பேசும்போது, தேர்வில் எந்தவொரு காரணத்திற்காகவும் இடையூறு ஏற்பட்டால் அது முறையல்ல. அரசு பணியமர்த்தல் மற்றும் தேர்வுகளில் புனிதம் மற்றும் வெளிப்படை தன்மை மிக அவசியம்.

சமீபத்திய வினாத்தாள் கசிவு சம்பவங்களில், முறையான விசாரணையை நடத்த அரசு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் உள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான தண்டனையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதற்கு முன், வேறு சில மாநிலங்களிலும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்தன. அதனால், தேசிய அளவில் வலுவான நடவடிக்கைகள், அரசியல் சார்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

வினாத்தாள் கசிவுக்கு எதிராக, நாடாளுமன்றம் ஒரு வலிமையான சட்டம் இயற்றியிருக்கிறது என்றார். தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக அரசு பணியாற்றி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்