ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மதுபானம்: சந்திரபாபு நாயுடு வாக்குறுதி
|ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்று 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆட்சியில் அமர்ந்ததும் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார் என்று சந்திரபாபு நாயுடு விமர்சித்தார்.
அமராவதி,
ஆந்திராவில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் மே 13 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்காளர்களைக் கவர வினோதமான வாக்குறுதிகளை இரு கட்சிகளும் வாரி வழங்கி வருகிறது. அவற்றில் ஒன்றாக மலிவு விலையில் தரமான மது தருவோம் என்ற வாக்குறுதியும் வெளியாகியுள்ளது.
இந்த வாக்குறுதியை முன்வைத்து தெலுங்கு தேசம் கட்சி பிரசாரம் செய்து வருகிறது. மதுபானங்களின் தரம் மற்றும் அதிக விலை ஆகியவற்றை முன்வைத்து, நீண்ட காலமாக ஆளும் அரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டி வந்தது. இதனால், மதுபான விவகாரத்தையும் தெலுங்கு தேசம் கட்சி கையில் எடுத்து இருக்கிறது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியதாவது:
ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்துவேன் என்று 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆட்சியில் அமர்ந்ததும் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டார். அனைத்து பொருட்களின் விலையும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இவற்றில் உழைக்கும் மக்கள் விரும்பக்கூடிய மதுபானங்களும் விதி விலக்கல்ல.
சாமானிய மக்களுக்கான விலையில் இருந்த மதுவை, சிறிது சிறிதாக ஏற்றி, அவர்களுக்கு கட்டுப்படியாகாத விலைக்கு கொண்டு சென்று விட்டார்கள். விலையை உயர்த்தியவர்கள் அதற்கேற்றவாறு தரத்தையாவது உயர்த்தி இருக்கலாம். அதிக லாபத்துக்காக தரமற்ற மதுவை விநியோகித்து நம் மக்களின் ஆரோக்கியத்தையும் கெடுக்கிறார்கள் . தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கும்போது தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானத்தை அளிக்கவும் நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்றார்.