அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, எங்கள் சேவைகளை பாருங்கள்: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்
|அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, நாங்கள் வழங்கும் சேவைகளை பயன்படுத்துங்கள் என மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுடல்லி,
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று பேசும்போது, எங்களுடைய சேவைகளை பயன்படுத்தும்படி மத்திய அரசை நான் கேட்டு கொள்கிறேன். அரசியலை சற்று தள்ளி வையுங்கள். எங்களுடைய சேவைகளை பயன்படுத்துங்கள்.
அனைத்து பள்ளிகளையும், நீங்கள், நாங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களும் ஒன்றிணைந்து மேம்படுத்துவோம் என கூறியுள்ளார். அனைத்து அரசாங்கங்களும் (மாநிலங்கள்) இதனை ஒன்றிணைந்து செய்யும்.
இதுதவிர, இதனை இலவசம் என்று அழைப்பது நிறுத்தப்பட வேண்டும். தரமுள்ள கல்வியை வழங்குவது என்பது இலவசம் ஆகாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நல்ல தரமுள்ள, இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் நாம் செய்ய வேண்டும். 5 ஆண்டுகளில் டெல்லியில் இதனை நாங்கள் செய்து இருக்கிறோம்.
டெல்லியில் உள்ள 2.5 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகளை கிடைக்க நாங்கள் வழிவகை செய்துள்ளோம். டெல்லி அரசால் இது சாத்தியப்படும்போது, நாடு முழுவதும் கூட இதனை செயல்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.