சட்டவிரோதமாக மியான்மரை சேர்ந்த 718 பேர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக மாநில அரசு தகவல்
|சட்டவிரோதமாக மியான்மரை சேர்ந்த 718 பேர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இம்பால்,
இனப்பிரச்சினை வன்முறையில் தவிக்கும் மணிப்பூர் மாநிலம், மியான்மர் நாட்டுடன் 398 கி.மீ. எல்லையை கொண்டுள்ளது. எனவே மியான்மரில் இருந்து அந்நாட்டு மக்கள் மணிப்பூருக்குள் நுழைவது சர்வசாதாரணமாக நடக்கிறது. குறிப்பாக, மணிப்பூரின் குகி இனத்தினருடன் பாரம்பரிய உறவு கொண்ட சின் இனத்தினர், இந்த மாநிலத்துக்குள் வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், மியான்மர்வாசிகள் 718 பேர் கடந்த வாரம் மணிப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். அவர்களில் 209 பேர் ஆண்கள், 208 பேர் பெண்கள், 301 பேர் குழந்தைகள் என மாநில தலைமைச் செயலாளர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, இந்திய-மியான்மர் எல்லையைக் காக்கும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.