திருப்பதி ஏழுமலையான் கோவில் பவுர்ணமி கருட சேவை - கருடவாகனத்தில் காட்சியளித்த மலையப்ப சுவாமி
|திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருப்பதி,
திருமால் சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் இருக்க ஆசை கொண்டார். அதனை அறிந்த கருடன், வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்த்தார். அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார்.
இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை, பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது. பிரம்மோற்சவ காலங்களில் கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். ஒவ்வொரு பவுர்ணமி நாட்களிலும் கருடவாகனத்தில் வலம் வந்து அருள்பாலிக்கிறார்.
இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு திருமலை கோவிலில் பவுர்ணமி கருட சேவை வெகு சிறப்பாக நடைபெற்றது. சர்வாலங்கார அலங்காரத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருட வாகனத்தில் கோவில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.