கர்நாடகத்தில் ரூ.535 கோடியில் 1,520 பஸ்கள் கொள்முதல்; மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்
|கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.535 கோடியில் 1,520 பஸ்களை கொள்முதல் செய்ய மந்திரிசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
மந்திரிசபை கூட்டம்
கர்நாடக மந்திரிசபை கூட்டம் மாதந்தோறும் 2 முறை நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மாதத்திற்கான மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக விமானவியல் கொள்கைக்கு (2022-27) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு துறையில் தளவாடங்கள் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படும். அத்துடன் வெளிநாடுகளுக்கும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படும். இந்த துறையில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகள் மற்றும் மானியம் வழங்கப்படும். 4 மண்டலங்களாக பிரித்து சலுகைகள் வழங்கப்படும்.
நீர் கொள்கைக்கு ஒப்புதல்
இந்த தொழில் குறித்து பள்ளி-கல்லூரி மாணவர்கள் 200 பேருக்கு பயிற்சியும் அளிக்கப்படும். அந்த பயிற்சியை பெற மாணவர்களுக்கு தலா ரூ.70 ஆயிரம் மானியமும் வழங்கப்படும். ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் புண்ணிய தலத்தில் கர்நாடக பக்தர்களின் வசதிக்காக ரூ.85 கோடியில் தங்கும் விடுதி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பெலகாவி, கலபுரகியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வசதி வழங்க ரூ.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சித்ரதுர்கா மாவட்டம் இரியூரில் நகரில் பாதாள சாக்கடை வசதியை ஏற்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. கர்நாடக அரசின் நீர் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருவருக்கு ஆண்டிற்கு 1,600 கனமீட்டர் நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நீர் ஆதாரங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூரு மாநகராட்சியில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளிலும் பின்தங்கிய சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேயர்-துணை மேயர் பதவிகளின் பதவி காலம் 30 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 128 தாலுகா ஆஸ்பத்திரிகளில் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள சிறப்பு நிபுணர் நியமிக்கப்படுவார்.
1,520 பஸ்கள் கொள்முதல்
அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமன விதிகளில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 47 ஆகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு 45- ஆகவும், பொது பிரிவினருக்கு 42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கொப்பல் மாவட்டத்தில் உள்ள அஞ்சனாத்திரி மலை பகுதியில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு (கே.எஸ்.ஆர்.டி.சி.) ரூ.199 கோடியில் 650 பஸ்களும், பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்திற்கு (பி.எம்.டி.சி.) ரூ.336 கோடி செலவில் 870 நவீன பஸ்களும் என மொத்தம் ரூ.535 கோடியில் 1,520 பஸ்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பஸ்சின் விலை ரூ.40 லட்சம் என்ற அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி மாதுசாமி கூறினார்.