< Back
தேசிய செய்திகள்
சுங்கச்சாவடி ஊழியர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள மறுப்பு; பிரபல மல்யுத்த வீரர் - ஊழியர்கள் இடையே கடும் வாக்குவாதம்!
தேசிய செய்திகள்

சுங்கச்சாவடி ஊழியர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள மறுப்பு; பிரபல மல்யுத்த வீரர் - ஊழியர்கள் இடையே கடும் வாக்குவாதம்!

தினத்தந்தி
|
12 July 2022 8:31 PM IST

சுங்கச்சாவடி ஊழியர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள மறுத்ததால், ஊழியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக காளி குற்றம் சாட்டினார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடியில், பிரபல மல்யுத்த வீரர் காளி அங்குள்ள சுங்கச்சாவடி ஊழியர்களிடம் முரட்டுத்தனமாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

சம்பவத்தின் போது, சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர், காளியிடம் அடையாள அட்டையை கேட்டதாக தெரிகிறது. ஆனால் அப்போது அவர் தன்னை அறைந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால், சுங்கச்சாவடி ஊழியர்கள் காளியின் காரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்.

காருக்குள்ளே இருந்த காளி, சுங்கச்சாவடியை திறக்குமாறு ஊழியர்களிடம் கூறினாலும் அவர்கள் அதை செய்ய மறுத்துள்ளனர். அதனால் காரில் இருந்து இறங்கிய காளி அவர்களுடன் கோபமாக பேசுகிறார். அதனை தொடர்ந்து, காளிக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. ஊழியர்களில் ஒருவர், நாங்கள் உங்களை காலணிகளால் அடிப்போம் என்று கூறுகிறார்.

மல்யுத்த வீரர் காளி, தனது காரில் லூதியானா வழியாக கர்னாலுக்குச் சென்று கொண்டிருந்தபோது பானிபட்-ஜலந்தர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லடோவல் என்ற இடத்தில் ஒரு போலிஸ் அதிகாரி முன்னிலையில் இந்த சம்பவம் நடந்தது.

இதுகுறித்து காளி கூறுகையில், "சுங்கச்சாவடி ஊழியர்கள் என்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பினர். என்னை சுற்றி வளைத்து தவறாக நடந்துகொண்டனர். நேற்று, பஞ்சாபின் பில்லூரில் உள்ள சுங்கவரி ஊழியர் எனது காரை நிறுத்தி, செல்பிக்காக தவறாக நடந்து கொண்டார். நான் செல்பியை மறுத்தபோது, அவர்கள் இரக்கமின்றி இனவெறி கருத்துக்களைக் கூறினர். கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தினர்" என்று காளி கூறினார்.

இந்த நிலையில், மல்யுத்த ரசிகர்களால் பிரபலமாக 'தி கிரேட் காளி' என்று அழைக்கப்படும் மல்யுத்த வீரர் தலிப் எஸ் ராணா என்ற இயற்பெயர் கொண்ட காளி, இன்று இவ்விவகாரம் தொடர்பாக லூதியானாவில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை காளி அடைந்தார். அங்கு அவர் அளித்துள்ள புகாரில், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ள நான் மறுத்ததால், சுங்கவரி ஊழியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காளி, "என்னிடம் தவறாக நடந்து கொண்ட டோல் பிளாசா ஊழியரைத் தவிர்க்க என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். என்னை தகாத வார்த்தைகளால் திட்டி தூண்டிவிட முயன்றார். நான் கர்னாலுக்குச் செல்லும் போது இந்தச் சம்பவம் நடந்தது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்