பஞ்சாப்: முதல்-மந்தரி வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்; தடியடி நடத்தி கலைத்த போலீசார்..!
|பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்தரி பகவந்த் மான் தலைமையில் ஆம்ஆத்மி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. தேர்தலின் போது தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச தினக்கூலி 700 ரூபாயாக உயர்த்தப்படும் என ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
இந்த நிலையில், தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் முதல்-மந்தரி வீட்டை நோக்கி பேரணி சென்றனர்.
அப்போது, தோல் நோயால் பாதிக்கப்பட்டு கால்நடைகள் உயிரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் முழக்கமிட்டனர்.
இந்த நிலையில், விவசாயிகள் முதல்-மந்திரி வீட்டின் அருகே சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் முதல்-மந்தரி பகவந்த் மான் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.