அழுக்கு மெத்தையில் டாக்டரை படுக்க வைத்த விவகாரம்: சுகாதார மந்திரியை நீக்க மருத்துவ சங்கம் வலியுறுத்தல்
|அழுக்கு மெத்தையில் டாக்டரை படுக்க வைத்த விவகாரத்தில் பஞ்சாப் சுகாதார மந்திரியை நீக்க மருத்துவ சங்கம் வலியுறுத்தி உள்ளது.
லூதியானா,
பஞ்சாப் மாநிலத்தின் பரித்கோட்டில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மருத்துவக்கல்லூரியில் சமீபத்தில் ஆய்வு செய்த மாநில சுகாதார மந்திரி சேட்டன் சிங் ஜூரமஜ்ரா, அங்கு போடப்பட்டிருந்த அழுக்கு மற்றும் கிழிந்த மெத்தைகளை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அப்போது அவர் தன்னுடன் வந்திருந்த பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜ்பகதூரை அந்த மெத்தையில் படுக்க வைத்தார். இதனால் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்த அவர் தனது பணியை ராஜினாமா செய்தார்.
மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக துணை வேந்தருக்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கம் களத்தில் குதித்து உள்ளது. சுகாதார மந்திரியை உடனடியாக பதவி நீக்கம் செய்வதுடன், அவர் பொது மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று சங்கத்தின் பஞ்சாப் கிளை மாநில அரசை வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிளைத்தலைவர் டாக்டர் பரம்ஜித் சிங் மான், இந்த ஒட்டுமொத்த சம்பவம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கடும் நடவடிக்கைகளை மருத்துவ சங்கம் எடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.