பஞ்சாப் அரசு அலுவலகங்களில் புதிய பணி நேரம் அமலுக்கு வந்தது காலை 7.30 முதல் 2 மணி வரை செயல்பட தொடங்கின
|பஞ்சாப்பில் அரசு அலுவலகங்கள் காலை 7.30 மணி முதல் பகல் 2 மணி வரை செயல்படும் புதிய பணி நேர மாற்றம் நேற்று அமலுக்கு வந்தது.
சண்டிகார்,
கோடை கால வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள அலுவலக நேரத்தை மாற்றி அறிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில், "மே 2-ந்தேதி முதல், அரசு அலுவலகங்கள், காலை 7:30 - பகல் 2:00 மணி வரை மட்டுமே செயல்படும்,'' என்று முதல்-மந்திரி பகவந்த் மான் கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
அந்த பணி நேர மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை செயல்பட்ட அரசு அலுவலகங்கள் நேற்று காலை 7.30 மணிக்கே செயல்பட தொடங்கின. இந்த நடைமுறை, ஜூலை 15 வரை அமலில் இருக்கும்.
இதுகுறித்து முதல்-மந்திரி பகவந்த் மான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணிக்கு திறக்கப்படும். பிற்பகல் 2 மணி வரை இயங்கும். இந்த நடிவடிக்கை பல்வேறு பயன்களை தரும். இந்த நடைமுறையை அமல்படுத்துவது குறித்து நாங்கள் பணியாளர்களிடமும், பொதுமக்களிடமும் பேசி அவர்களின் சம்மதத்துடனே இதை செயல்படுத்தி உள்ளோம். 3 வாரங்களுக்கு முன்பே கூறிவிட்டதால் ஊழியர்கள் மனதளவில் இதற்கு தயாராகிவந்தனர்.
இந்த பணி நேர மாற்றத்தால் பணியாளர்கள், பொதுமக்கள் கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். மேலும் அலுவலக மின்சார செலவும் சிக்கனமாகும். புதிய பணி நேரத்தால் தினமும் 350 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு சுமார் 17 கோடி ரூபாய் வரை மிச்சமாகும். மொத்தமாக ஜூலை வரை ரூ.42 கோடி வரை மிச்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு அலுவலகங்கள் காலையிலேயே திறப்பதால் பொதுமக்கள் விரைவாக தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு, மீண்டும் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்கச் செல்ல முடியும். பள்ளி நேரத்திற்கும் இதற்கும் வித்தியாசம் இருப்பதால் மாணவ, மாணவிகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் பல இடையூறுகள் தவிர்க்கப்படும்.
போக்குவரத்து நெரிசல் மிக்க டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களில் இந்த பணி நேர மாற்றத்தை அமல்படுத்தினால் பல்வேறு சூழல்களை எளிதாக சமாளிக்க முடியும். எங்களின் இந்த நடைமுறையை ஆய்வு செய்து பிற மாநிலங்கள் இதை பின்பற்றி பயனடையக்கூடும்."
இவ்வாறு அவர் கூறினார்.
மாற்றப்பட்ட பணி நேரம், ஜூலை 15-ந் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படுமா? என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்-மந்திரி "இந்த நடவடிக்கையின் பலன்கள், முடிவுகளை அரசாங்கம் கவனித்துப் பார்த்து, ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகளை பெற்று, பின்னர் அது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.
பணி நேர மாற்றத்தை கடைப்பிடித்து பஞ்சாப் மந்திரிகள் பலரும் காலையிலேயே தங்கள் அலுவலகத்திற்கு வந்து செயல்பட தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.