பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரெயில் மறியல்: தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்
|பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் 3 நாட்கள் ரெயில் மறியல் போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அமிர்தசரஸ்,
பயிர்க்கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாததை தொடர்ந்து நேற்று அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3 நாள் ரெயில் மறியல் போராட்டத்தை தொடங்கினர். ரெயில் தண்டவாளங்களில் ஆயிரக்கணக்கில் அமர்ந்து இருந்த அவர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இன்றும், நாளையும் தொடரும்
இந்த போராட்டம் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் தொடரும் என விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
இந்த போராட்டத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, பாரதிய கிசான் யூனியன், ஆசாத் கிசான் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அமிர்தசரஸ் அருகே உள்ள தேவிதாஸ் புராவில், அமிர்தசரஸ்-டெல்லி ரெயில் பாதையில் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்தினர்.
இதைப்போல ஜலந்தர், மோகா, ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், சங்ரூர், பாட்டியாலா, பதிண்டா, பெரோஸ்பூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரெயில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது.
வெள்ள நிவாரண நிதி
அமிர்தசரசில் நடந்த போராட்டத்தில் பேசிய விவசாய அமைப்பு தலைவர் குர்பசன் சிங், 'வட இந்திய மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி வெள்ள நிவாரண நிதி மற்றும் சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின்படி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை ஆகும்' என தெரிவித்தார். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் ஒட்டுமொத்த பயிர்க்கடனையும் ரத்து செய்ய வேண்டும் எனக்கூறிய அவர், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
விவசாயிகளின் இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப்பின் பல பகுதிகளில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.