< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்; போதை பழக்கம் ஒழிய வேண்டும் என்பதே விருப்பம்:  புதிதாக பதவியேற்ற மந்திரி
தேசிய செய்திகள்

பஞ்சாப்; போதை பழக்கம் ஒழிய வேண்டும் என்பதே விருப்பம்: புதிதாக பதவியேற்ற மந்திரி

தினத்தந்தி
|
8 Jan 2023 1:51 AM GMT

பஞ்சாப்பில் புதிதாக பதவியேற்று கொண்ட மந்திரி, போதை பழக்கம் ஒழிய வேண்டும் என்பதே தனது விருப்பம் என கூறியுள்ளார்.



சண்டிகர்,


பஞ்சாப்பில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரசை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் வெற்றிக்கு டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவாலின் இலவச மின்சாரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் கைகொடுத்தன.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் அக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார். இந்நிலையில், பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து மந்திரி பாஜா சிங் சராரி நேற்று பதவி விலகினார்.

பாஜா சிங், மந்திரி பதவியில் இருந்து விலகும் முடிவை வெளியிட்ட பின்பு இதுபற்றி கூறும்போது, கட்சியின் உண்மையான விசுவாசியாக தொடர்ந்து நீடிப்பேன்.

இந்த மந்திரி பதவியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன். கட்சியில் ஒரு போர் வீரனாக தொடர்ந்து பணியாற்றுவேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து, பஞ்சாப் அமைச்சரவையில் பல மந்திரிகளின் பதவி மாற்றியமைக்கப்பட கூடும் என கட்சியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்தது.

இதேபோன்று, அமைச்சரவையில் புதிதாக பல்பீர் சிங் என்பவர் நேற்று மந்திரியாக பதவியேற்று கொண்டார். அவருக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், மருத்துவ கல்வி மற்றும் தேர்தல் துறை ஒதுக்கப்பட்டன.

விவசாய குடும்பத்தில் இருந்து வந்த அவர், கண் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். 40 ஆண்டுகளாக மருத்துவ துறையில் உள்ள அவர் நோயாளிகளுக்கு கட்டணமின்றி, இலவச சிகிச்சை அளிப்பவர் என அந்த பகுதியில் அறியப்படுபவர்.

அவர் பதவியேற்று கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பஞ்சாப்பில் போதை பழக்கம் முற்றிலும் முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் என கூறியுள்ளார்.

பஞ்சாப் சுகாதார துறை முழு அளவில் வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பஞ்சாப்பில் பெரிய தனியார் மருத்துவமனைகள் என்ன வசதிகளை கூறி மருத்துவமனைகளை திறந்திருக்கிறார்களோ, அந்த வசதிகள் ஏழைகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்