இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
|நவீன தளவாடங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
அமிர்தசரஸ்,
பஞ்சாப் அருகே உள்ள சர்வதே எல்லைக்கோட்டினை கடந்து பாகிஸ்தான் டிரோன்கள் ஊடுருவ முயலும் சம்பவங்கள் அ்டிக்கடி அரங்கேறுகின்றன. முன்பெல்லாம் பயங்கரவாதிகள் நுழைவை எதிர்த்து ராணுவத்தினர் செயல்பட்டு வந்தனர். இப்போது நவீன தளவாடங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
பயங்கரவாதிகளின் ஊடுருவ முயற்சியை முறியடிக்கும் வகையில் பசில்கா மாவட்டம் இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிகாலை ஜோதவாலா கிராமத்தில் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்ற போது, இந்திய வான் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்து சந்தேகத்துக்கிடமாக பறந்த கருப்பு நிறமர்ம டிரோனை அவர்கள் சுட்டுவீழ்த்தினார்கள்.
பின்னர் அதனை எல்லை பாதுகாப்பு வீரர்கள் கைப்பற்றினர். அந்த டிரோனில் 2 பாக்கெட்டுகளில் 2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஹெராயினை கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது.