< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்பில் நடந்த பண்டிகைக்கு பாதயாத்திரையாக சென்ற 7 பக்தர்கள் லாரி மோதி பலி
தேசிய செய்திகள்

பஞ்சாப்பில் நடந்த பண்டிகைக்கு பாதயாத்திரையாக சென்ற 7 பக்தர்கள் லாரி மோதி பலி

தினத்தந்தி
|
13 April 2023 10:14 PM GMT

பஞ்சாப்பில் நடந்த பண்டிகைக்கு பாதயாத்திரையாக சென்ற உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 7 பக்தர்கள் லாரி மோதி உயிரிழந்தனர்.

ஹோசியார்பூர்,

சீக்கியர்களின் முக்கிய குருநாதர்களில் ஒருவரான ரவிதாஸின் நினைவிடம் குரல்கார்சாகிப்பில் உள்ளது. பஞ்சாப்பின் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள இங்கு பைசாகி திருவிழா பிரபலமாக கொண்டாடப்படும். தற்போது நடைபெறும் பைசாகி பண்டிகைக்காக அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இந்த திருவிழாவுக்கு வருவது வாடிக்கை.

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டம் மஸ்தான் கேரா பகுதியை சேர்ந்த 17 பேர், பாத யாத்திரையாக பைசாகி திருவிழாவுக்கு கிளம்பி சென்றனர். அவர்கள் குரல்கார்சாகிப் பகுதியை நெருங்கி, மலைச்சரிவுகள் நிறைந்த பகுதியில் நடந்து வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து பாத யாத்திரை பயணிகள் மீது மோதியது. பிரேக் பிடிக்காததால் லாரி தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியதாக தெரியவந்தது.

லாரி மோதியதில் பாத யாத்திரை பயணிகள் 17 பேரும் காயம் அடைந்தனர். அவர்களில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்களின் பெயர் விவரமும் தெரியவந்துள்ளது. காயம் அடைந்தவர்களில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்