பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை - ஆம் ஆத்மி திட்டவட்டம்
|பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சண்டிகார்,
பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில், காங்கிரசும், ஆம் ஆத்மியும் அங்கம் வகிக்கின்றன. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் முடிந்த அளவு இணைந்து செயல்பட வேண்டும் என இந்த கூட்டணியின் சமீபத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் பஞ்சாப்பில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது எனவும், மொத்தமுள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் எனவும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநில மந்திரியுமான அன்மோள் ககன் மன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'காங்கிரசுடன் எங்களுக்கு எந்த கூட்டணியும் இல்லை. பஞ்சாப் மக்கள் முதல்-மந்திரி பகவந்த் மன்னை நேசிக்கின்றனர். காங்கிரசுடனான எந்த கூட்டணியையும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அந்த கட்சியை சேர்ந்த ஏராளமான தலைவர்கள் ஊழல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்' என தெரிவித்தார்.
பஞ்சாப்பில் நாங்கள்தான் மாநிலத்துக்கான பொறுப்பாளர்கள் எனவும், இதில் சமரசத்துக்கே இடமில்லை என்றும் கூறிய அன்மோள், மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம் என்றும் திட்டவட்டமாக கூறினார்.