பஞ்சாப்: ஜலந்தர் இடைத்தேர்தலில் வெற்றியை உறுதி செய்தது ஆம் ஆத்மி
|மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று பகவந்த் மான் தெரிவித்தார்.
சண்டிகர்,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது.
அதே சமயம் இன்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கும், ஒடிசாவில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும், உத்தர பிரதேசத்தில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் ஜலந்தர் தொகுதியில் மதியம் 2 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் கரம்ஜித் கவுர் சவுத்ரியை விட 58 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று ஆம் ஆத்மி வேட்பாளர் சுஷில் குமார் ரிங்கு ஜலந்தர் தொகுதியில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இது குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இதை எங்கள் பொறுப்பாக கருதுகிறோம். நாங்கள் எந்த கருத்து கணிப்பிலும் வரவில்லை, நேரடியாக ஆட்சிக்கு வருகிறோம்" என்று தெரிவித்தார்.