திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
|திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
சண்டிகர்,
இமாச்சலபிரதேச மாநிலம் உனா மாவட்டம் டாரா பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பஞ்சாப் மாநிலம் பகத்சிங் நகர் மாவட்டம் மஹ்ரோவால் கிராமத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றுள்ளனர்.
பஞ்சாப்பின் மேகத்பூர் அருகே வனப்பகுதியில் ஆற்றோரம் இன்று சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது.
இச்சம்பவத்தில் கார் டிரைவர், குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் அடித்து செல்லப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த கிராமத்தினர் ஒருநபரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இச்சம்பவத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய 3 பேரை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.