பஞ்சாப்; 29 கிலோ போதைப்பொருளுடன் 2 கடத்தல்காரர்கள் கைது
|போதைப்பொருள் கடத்திய 2 பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் காவல் துறையினர் இணைந்து அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா பக்கம் ஊடுருவுபவர்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அப்போது இருவர் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்தனர். அவர்களை எச்சரிக்கும் வகையில் இவர்கள் துப்பக்கிச்சூடு நடத்தினர். அதில் ஒருவருக்கு கையில் குண்டு பாய்ந்தது. விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் இருவரையும் பிடித்து சோதனை செய்தனர்.
அதில் அவர்களிடமிருந்து 29.26 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட ஹெராயின் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த கடத்தல்காரரை சிகிச்சைக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.