பொறியியல் மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை
|புனேயில், வேலை கிடைக்காதோ என்ற அச்சத்தில் பொறியியல் பயிலும் மாணவர் ஒருவர் தனது வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
புனே,
மராட்டிய மாநிலம் புனே நகரில் பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர், தனக்கு வேலை கிடைக்காதோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
21 வயதான அந்த மாணவர், ஒரு புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், மேற்கு புனேவில் உள்ள ஹிஞ்சவாடி அருகே உள்ள தனது வீட்டின் எட்டாவது மாடியில் இருந்து அவர் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலை செய்துகொண்ட மாணவரிடம் இருந்து ஒரு தற்கொலைக் குறிப்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதில், தனது படிப்பை முடித்த பிறகு தனக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார் என்று ஹிஞ்சவாடி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.