புனே கார் விபத்து: விசாரணை நடத்த 12க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்துள்ள போலீசார்
|போலீசாா் புனே கார் விபத்து வழக்கில் சிறுவனின் தாய் சிவானியையும் நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
புனே,
மராட்டிய மாநிலம் புனே கல்யாணி நகரில் கடந்த 19-ந் தேதி 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிச்சென்ற சொகுசு கார் மோதி 2 அப்பாவி ஐ.டி. ஊழியர்கள் உயிரிழந்தனர். மதுபோதையில் வேகமாக காரை ஓட்டி 2 பேரின் உயிர் போக காரணமாக இருந்த சிறுவனை 300 வார்த்தையில் கட்டுரை எழுத சொல்லி சிறார் கோர்ட்டு ஜாமீனில் விடுவித்த விவகாரம் நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் இடையே எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து புனே கார் விபத்து வழக்கு கவனம் பெற்றது.
சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர் சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். அவனது தந்தை விஷால் அகர்வாலும் கைது செய்யப்பட்டார். இதுதவிர சிறுவனை மது குடிக்க அனுமதித்த பார் உரிமையாளரும், ஊழியர்களும் சிக்கினர்.
இதேபோல காரை ஓட்டிச்சென்றதாக வீட்டின் கார் டிரைவரை ஆஜர்படுத்தி சிறுவனை காப்பாற்ற முயன்ற சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் போலீசார் சிறுவனின் தாத்தா மற்றும் தந்தை மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இருவரும் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றி மோசடி நடந்து இருப்பதும் அம்பலமானது. இதுதொடர்பாக புனே சசூன் அரசு ஆஸ்பத்திரியின் 2 டாக்டர்கள், ஊழியர் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் சிறுவனின் தந்தையிடம் ரூ.3 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சிறுவனுக்கு பதிலாக அவனது தாய் ரத்த மாதிரி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாா் புனே கார் விபத்து வழக்கில் சிறுவனின் தாய் சிவானியையும் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சிறுவன் செய்த குற்றத்தை மறைக்க செய்த பல தவறுகளால், சிறுவன் மட்டுமின்றி அவனது தந்தை, தாய், தாத்தா என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே ரத்த மாதிரியை மாற்றிக்கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக நேற்று போலீசார் சிறுவனின் தாய் முன்னிலையில், சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.
விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு முதலில் ஜாமீன் வழங்கியவர் சிறார் கோர்ட்டு நீதிபதி ஆவார். அவர் ஜாமீன் வழங்கியதில் விதிகள் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து மாநில அரசு கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே புனே கார் விபத்து சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடத்த போலீசார் 12க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.