மாதேஸ்வரன் மலையில் புலி மீது அமர்ந்திருக்கும் 108 அடி உயர மலை மாதேஸ்வரா சிலை
|மலை மாதேஸ்வரா கோவிலில் புலி மீது அமர்ந்திருக்கும் 108 அடி உயர மலை மாதேஸ்வரா சிலையை வருகிற 18-ந்தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திறந்து வைக்கிறார்.
கொள்ளேகால்:
மலை மாதேஸ்வரா கோவிலில் புலி மீது அமர்ந்திருக்கும் 108 அடி உயர மலை மாதேஸ்வரா சிலையை வருகிற 18-ந்தேதி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திறந்து வைக்கிறார்.
மலை மாதேஸ்வரா கோவில்
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மாதேஸ்வரன் மலை பகுதியில் பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. மலை மீது அமைந்திருக்கும் இந்த கோவிலில் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில் மலை மாதேஸ்வராவுக்கு மலை மீது பிரமாண்ட சிலை வைக்க கடந்த 2016-ம் ஆண்டு சித்தராமையா ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மலை மாதேஸ்வரா கோவிலில் மலை மீது 108 அடி உயரத்தில் மலை மாதேஸ்வரா புலி மீது அமர்ந்திருக்கும் சிலையை அமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காக சிலை அமைக்கும் பணி தாமதமாகி வந்தது.
108 அடி உயர சிலை
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்து சிலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வந்தது. கதக்கை சேர்ந்த பிரபல சிற்பி ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினர் புலி மீது மலை மாதேஸ்வரா அமர்ந்திருக்கும் சிலையை செதுக்கினர். இவர்கள் தான் முருடேஸ்வரில் உள்ள சிவன் சிலையை செதுக்கியவர்கள் ஆவர். தரையில் கல் பாறையும் அமைக்கப்பட்டது. இதையடுத்து சிலையின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
கடந்த 10-ந்தேதி மாவட்ட பொறுப்பு மந்திரி சோமண்ணா மலை மாதேஸ்வரா கோவிலுக்கு சென்று சிலை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடிக்கும்படி அவர் உத்தரவிட்டார். இந்த நிலையில், தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது. படிக்கட்டுகள் அமைக்கும் பணி மட்டும் நடந்து வருகிறது.
பசவராஜ் பொம்மை திறந்து வைக்கிறார்
புலி மீது மலை மாதேஸ்வரா அமர்ந்திருக்கும் 108 அடி உயர சிலை பிரமாண்டமாகவும், மக்களை கவரும் வகையில் கலைநயத்துடன் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் மலை மாதேஸ்வரா சிலை திறப்பு விழா வருகிற 18-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மலை மாதேஸ்வரா கோவிலுக்கு வந்து 108 அடி உயர மலை மாதேஸ்வரா சிலையை திறந்து வைக்க உள்ளார்.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மந்திரி சோமண்ணா, மலை மாதேஸ்வரா கோவிலுக்கு சென்று விழாவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளார்.