புதுவை: சமூக வலைதளம் மூலம் பழகிய இளம் பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபர்கள் கைது
|புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் மெசேஜ் அனுப்பினர். பின்னர் அந்த இளம்பெண்ணும், அவர்களுடன் மெசேஜ் அனுப்பி, பேசிப்பழகி நண்பர்கள் ஆனார்கள்.
இந்தநிலையில் அந்த இளம்பெண்ணுக்கு, அவர்கள் ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச குறுந்தகவலை அனுப்பினர். இதனால் அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், இளம்பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பியது சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த லோகேஷ் (வயது 28), திருவள்ளூர் மாவட்டம் பாக்கத்தை சேர்ந்த குகன் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.