புதுவை, காரைக்காலில் காலாண்டு தேர்வு திட்டமிட்டப்படி நாளை தொடங்கும்: அமைச்சர் அறிவிப்பு
|புதுவை, காரைக்காலில் திட்டமிட்டப்படி காலாண்டு தேர்வுகள் நாளை தொடங்கும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த புதுவை, காரைக்காலில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டிருந்தது. அத்துடன் நாளை முதல் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடம் இருந்தது. ஆனால் புதுவையில் நாளை 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது "காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த ஒருவார விடுமுறைக்கு பிறகு புதுவை, காரைக்காலில் பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. திட்டமிட்டப்படி புதுவை, காரைக்காலில் காலாண்டு தேர்வுகளும் நாளை தொடங்கும். தேர்வுகள் வருகிற 30-ந் தேதி வரை நடக்கும். தேர்வு முடிந்த பிறகு ஒருவாரத்துக்கு விடுமுறை விடப்படும். அக்டோபர் 6-ந் தேதி முதல் 2-ம் பருவத்துக்கு பள்ளிகள் திறக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.