< Back
தேசிய செய்திகள்
புதுக்கோட்டை சிறுமி கற்பழித்து கொலை: வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

புதுக்கோட்டை சிறுமி கற்பழித்து கொலை: வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை

தினத்தந்தி
|
9 Dec 2022 1:15 AM IST

சிறுமியை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்தவர் சாமிவேல் என்கிற ராஜா (வயது 26). இவர் கடந்த ஆண்டு (2021) அதே பகுதியை சேர்ந்த சிறுமியை கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரது தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்து உறுதிப்படுத்த காவல்துறை தரப்பில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணையின்போது அரசு தரப்பில் குற்றவியல் தலைமை வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி 'குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்தது சரி' என்று கூறி அதற்கான ஆவணங்களையும் ஆதாரங்களையும் எடுத்து வாதாடினார்.

இதனைத்தொடர்ந்து கீழமை நீதிமன்றம் முறையான விசாரணை செய்து தூக்கு தண்டனை வழங்கி உள்ளது. எனவே இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை உறுதி செய்து ஐகோர்ட்டு கடந்த ஜனவரி 2-ந்தேதி உத்தரவிட்டது.

இடைக்கால தடை

இந்த உத்தரவுக்கு எதிராக ராஜா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஆதித்யா சோந்தி ஆஜரானார். மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த சுப்ரீம்கோர்ட்டு, சிறுமி கற்பழித்து கொலை செய்த வழக்கில் வாலிபர் ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்