< Back
தேசிய செய்திகள்
புதுவை மாநில அந்தஸ்து கோரிக்கை: மதுபான பிரச்சினையை திசை திருப்ப ரங்கசாமி அரசியல் நாடகம்; தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

புதுவை மாநில அந்தஸ்து கோரிக்கை: மதுபான பிரச்சினையை திசை திருப்ப ரங்கசாமி அரசியல் நாடகம்; தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
18 Dec 2022 5:04 AM IST

மதுபான பிரச்சினையை திசை திருப்ப மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து அரசியல் நாடகமாடுவதாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகள் பகிரங்கமாக குற்றஞ்சாட்டின.

ரங்கசாமி தடாலடி

புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை செய்ய முடியவில்லை. அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் மத்திய அரசு தாமதம் செய்வதாக மத்திய மந்திரி முன்னிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி புகார் தெரிவித்தார்.

கோரிக்கைகளுடன் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் சந்தித்த சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களிடம், அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதுடன் அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து தடாலடியாக அவர் தெரிவித்த இந்த விமர்சனங்கள் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற் படுத்தி இருப்பதுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு முக்கிய அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதுவை சாரம் அவ்வை திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

பா.ஜ.க. போல் கவர்னர்

புதுவைக்கு பொறுப்பாக மத்திய மந்திரிகள் 3 பேரும், ஒரு எம்.பி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தாண்டி கவர்னரும் பா.ஜ.க.வினர் போல் செயல்பட்டு வருகிறார். விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கேட்பது தொடர்பாக எதுவுமே தெரியாமல் கவர்னர் பேசிவருகிறார். மின்துறை தனியார்மயமாக்கப் படுவதுபோல், ஏராளமாக செலவு செய்த நிலையில் விமான நிலையத்தையும் தனியார் மயமாக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

மாநில அந்தஸ்து பெற மதச்சார்பற்ற அணி மக்களை திரட்டி போராட்டம் நடத்த உள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும். இல்லையென்றால் உருப்படாது என்கிறார். மாநில அந்தஸ்து அதிகாரத்தை கொண்டுதான் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்தாரா?.

தி.மு.க. போராடி இடஒதுக்கீட்டை பெற்றது. ஆனால், ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதுடன், அரசுப் பள்ளிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எடுத்து விட்டனர். நீட் தேர்வு, மின்துறை தனியார் மயம் உள்ளிட்டவற்றில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது முகத்தை காட்டவேண்டும்.

வெகுண்டெழ வேண்டும்

சிறப்புக்கூறு நிதியில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டுவது, தொழில்பயிற்சி அளிப்பது, உள்ளிட்ட 120 பணிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. ஆனால் எதையும் செய்யவில்லை. சிறப்புக்கூறு நிதியில் 22 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை உருவாக்குவது, சாலை வசதி ஏற்படுத்தி தருவது, ரேஷன்கடைகளை திறப்பது, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவது உள்ளிட்ட அனைத்து திட்டங்களிலும் தோல்வி அடைந்த மாநிலமாகவே உள்ளது.

பாண்லேவில் 2.50 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து வினியோகிக்க முடியும். ஆனால் ஏற்கனவே உள்ள 1.10 லட்சம் லிட்டர் உற்பத்தியையும் குறைத்து வருகின்றனர். முதல்-அமைச்சர் வெளியே வந்து வெகுண்டெழுந்து போராட வேண்டும். தனித்தன்மையையும், மாநில உரிமையையும் காக்கவேண்டும்.

இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. பேசினார்.

மதுபான வருமானத்தை நம்புவதா?

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் கூறியதாவது:-

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்பதில் தவறில்லை. மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணமும். ஆனால் அதேநேரத்தில் நமது மாநிலத்துக்கு போதுமான வருமானம் உள்ளதா? என்று பார்க்கவேண்டும். நமக்கு இயற்கை வளங்கள் ஏதும் கிடையாது.

15 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரிக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரே எம்.பி. தொகுதியில் 25 லட்சம் மக்கள் உள்ளனர். ஆனால் அந்த ஒரு எம்.பி. தொகுதிக்கு ரூ.1000 கோடி வரை மட்டுமே செலவிடப்படுகிறது. அப்படியிருக்க புதுச்சேரி வளமாக இல்லை என்று கூறமுடியுமா?

இப்போது மத்திய அரசு நமக்கு தேவையான நிதியை தருகிறது. நாம் தனிக்குடித்தனம் சென்றால் எந்த வழியில் வருமானம் வரும்?. முதலில் வருமானம் ஈட்ட வேண்டுமானால் தொழிற்சாலைகள் வளர்ச்சியை பார்க்க வேண்டும். ஒரேயடியாக மதுபான வருமானத்தையே நம்பி இருக்கக்கூடாது.

இவ்வாறு சாமிநாதன் கூறினார்.

அரசியல் நாடகம்

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ரங்கசாமி தற்போது மாநில அந்தஸ்து பிரச்சினையில் தனது குமுறலையும், கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். அவர் அரசியல் நாடகம் நடத்துகிறார். கடந்த 2001 முதல் 2008 வரை முதல்-அமைச்சராக இருந்தபோது மாநில அந்தஸ்துக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2011-ல் தனிக்கட்சி தொடங்கி மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையுடன் ஆட்சியை பிடித்தார்.

அப்போதும், இப்போதும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிதான் உள்ளது. இப்போது மதுபான பிரச்சினையில் அவரது ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததற்கு ஆதாரம் உள்ளது. அதிகாரிகளே அதை கூறுகிறார்கள்.

இனிமேலும் மக்களை ஏமாற்றும் வேலை நடக்காது. கூட்டணி என்றாலும் தவறான விஷயங்களை எங்களால் ஏற்க முடியாது. இந்த விவகாரத்தை திசை திருப்ப மாநில அந்தஸ்து என்று நாடகமாடுகிறார். எதிர்க்கட்சி முதல்-அமைச்சர்கள் எல்லாம் பிரதமரை சந்திக்கும் நிலையில் மாநில அந்தஸ்துக்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி எத்தனை முறை பிரதமரை சந்தித்தார்? என்பதெல்லாம் மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்