புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு: குற்றவாளி இருவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
|சிறுமி படுகொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக 13 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த இரண்டு கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்று சாக்கடை கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
குற்றவாளியான இருவரையும் பாதுகாப்பு கருதி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் மருத்துவ பரிசோதனை முடிந்து போலீசார் சிறைக்கு அழைத்துச்சென்றனர்.
இந்த நிலையில், சிறுமி படுகொலை வழக்கு கைதாகியுள்ள இரண்டு பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மத்திய சிறை வளாகத்திற்கு சென்ற நீதிபதி இளவரசன், இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையில், சிறுமி படுகொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக புகார் எழுந்த நிலையில், விசாரணை அதிகாரி உள்பட 13 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் தனசெல்வம், உதவி காவல் ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.