பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து பயன்படுத்தும் முதல்-மந்திரி ரங்கசாமி
|புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கடந்த 1997-ம் ஆண்டு அம்பாசிடர் கார் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில முதல்-மந்திரி ரங்கசாமி. இவர் வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக மோட்டார் சைக்கிளையே அதிகம் விரும்புவார். இவர் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தனது பழைய மோட்டார் சைக்கிளை (யமகா ஆர்.எக்ஸ். 100) புதுப்பித்தார். அந்த மோட்டார் சைக்கிளில் சென்றுதான் கடந்த மாதம் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு சென்றார்.
இந்த நிலையில் முதல்-மந்திரி ரங்கசாமி, முதன் முதலில் கடந்த 1997-ம் ஆண்டு அம்பாசிடர் கார் வாங்கி பயன்படுத்தி வந்தார். நாளடைவில் புதிய மாடல் கார்களை வாங்கி பயன்படுத்தி வந்தார். இதனால் அந்த அம்பாசிடர் காரை தனது வீட்டிலேயே நிறுத்தி வைத்திருந்தார். அந்த கார் பல ஆண்டுகளாக பயன்படுத்தாத காரணத்தால் மிக மோசமாக பழுதாகி போனது. அந்த காரை விற்கவோ அல்லது அப்புறப்படுத்தவோ மனமில்லாமல் காரை புதுப்பிக்க விரும்பினார்.
அதன்படி அந்த கார், தூத்துக்குடியில் உள்ள ஒரு பணிமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொண்டு விடப்பட்டது. தற்போது அந்த அம்பாசிடர் கார் பழுதுபார்க்கப்பட்டு, முதல்-மந்திரி ரங்கசாமி வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அந்த காரை பார்த்த மகிழ்ச்சியில் முதல்-மந்திரி ரங்கசாமி, காரை ஒருமுறை சுற்றிபார்த்தார். பின்னர் காரின் முன்பக்க இருக்கையில் ஏறி அமர்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.