< Back
தேசிய செய்திகள்
பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு; மார்ச் 10-ந் தேதி தொடங்குகிறது
தேசிய செய்திகள்

பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு; மார்ச் 10-ந் தேதி தொடங்குகிறது

தினத்தந்தி
|
21 Oct 2022 6:45 PM GMT

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு மார்ச் மாதம் 10-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான காலஅட்டணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு:

பி.யூ.சி. 2-ம் ஆண்டு

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் தொடங்கி நடைபெறுவது உண்டு. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020, 2021-ம் ஆண்டு அந்த தேர்வு நடத்தப்படவில்லை. எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டன. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் மாதம் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததை அடுத்து பள்ளிகள் சற்று முன்னதாகவே கடந்த மே மாதம் 15-ந் தேதி தொடங்கப்பட்டது. அதனால் பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு குறித்த காலத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வுக்கான தற்காலிக காலஅட்டவணை 5 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி 2022-23-ம் ஆண்டுக்கான பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வுக்கான தற்காலிக காலஅட்டவணையை பள்ளி கல்வித்துறை நேற்று அறிவித்துள்ளது.

காலஅட்டவணை

கர்நாடகத்தில் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். 2022-23-ம் ஆண்டுக்கான பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையை மாநில அரசின் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற மாா்ச் மாதம் 10-ந் தேதி தேர்வு தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. இது தற்காலிக காலஅட்டவணை ஆகும்.

முதல் நாள் அதாவது 10-ந் தேதி கன்னடம், 11-ந் தேதி கணிதம், 13-ந் தேதி பொருளாதாரம், 14-ந் தேதி வேதியியல், 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், மராட்டி, உருது, சமஸ்கிருதம், பிரெஞ்சு, 18-ந் தேதி உயிரியல், 20-ந் தேதி இயற்பியல்-வரலாறு, 21-ந் தேதி இந்தி, 23-ந் தேதி ஆங்கிலம், 25-ந் தேதி அரசியல் அறிவியல், 27-ந் தேதி கணக்கு பதிவியல், மனை அறிவியல், 29-ந் தேதி சமூகவியல், கம்ப்யூட்டர் அறிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளன.

ஆட்சேபனை

இந்த தேர்வு காலஅட்டவணையை அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் வெளியிட்டு மாணவர்கள் பார்க்கும் வகையில் செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த காலஅட்டவணையில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் அதுபற்றி வருகிற நவம்பர் மாதம் 21-ந் தேதிக்குள் பள்ளி கல்வித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. jdexam.dpue@gmail.com என்ற இணையதள முகவரிக்கு ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.

மேலும் செய்திகள்