பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துவோருக்கு பேரிடி- பால் விலை உயர்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
|கர்நாடக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் விலை உயர்வை வாபஸ் பெற கோரிக்கை விடுத்துள்ளனர்.
பால் விலை உயர்வு
கர்நாடகத்தில் சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்கள் விலை அடிக்கடி உயர்ந்து கொண்டே செல்கிறது. அத்தியாவசிய பொருட்களை தவிர மின்சார கட்டணமும் அவ்வப்போது அதிகரித்து மக்களுக்கு ஷாக்கை கொடுக்கிறது. இந்த நிலையில் பாலின் விலையை உயர்த்தி மக்களுக்கு அரசு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து உள்ளது.
கர்நாடகத்தில் நந்தினி என்ற பெயரில் கர்நாடக பால் கூட்டமைப்பு பால், தயிர், மோர், லெசி ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக பால் கூட்டமைப்புக்கு பால் உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகள் ஒரு லிட்டர் பாலுக்கு வழங்கப்படும் தொகையை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அமலுக்கு வந்தது
இதனால் பால் விலையை உயர்த்த கர்நாடக பால் கூட்டமைப்பு முடிவு செய்து இருந்தது. மேலும் கடந்த வாரம் கர்நாடகத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி பால் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால் இதற்கு கர்நாடக அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தால் பால் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கர்நாடக அரசுடன், பால் கூட்டமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் பால் விலையை உயர்த்த அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதையடுத்து பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி ஒரு லிட்டர் பால் ரூ.37 ல் இருந்து ரூ.39 ஆக உயர்ந்து உள்ளது. தயிர் ஒரு கிலோ ரூ.45-ல் இருந்து
ரூ.47 ஆகவும், சிறப்பு பால், சுபம் பால் விலை ரூ.43-ல் இருந்து ரூ.45 ஆகவும், சம்ருத்தி பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும், சந்திருப்தி பால் ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆகவும் உயர்ந்து உள்ளது.
பால் பொருட்கள் விலை
பால் விலையின் உயர்வு நேற்று காலை பால் வாங்க சென்ற பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பால் விைல உயர்வால் டீ, காபி விைல அதிகரிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது. ேமலும் பாலில் தயாரிக்கப்படும் ெபாருட்களின் விலையும் அதிகரிக்கப்படலாம்
என தகவல் ெவளியாகி உள்ளது.
இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பால் விலை உயர்வால் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தி வரும் மக்கள் இந்த விலை உயர்வால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பால் விலை உயர்வுக்கு பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-
நடுத்தர மக்கள் தலையில்...
பெங்களூரு கோரமங்களா பகுதியில் வசித்து வரும் செல்வம்:- நாள்தோறும் அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்தி கொண்டே செல்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றே இதுவரை தெரியவில்லை. தற்போது பால் விலையையும் உயர்த்தி விட்டனர். ஏழை, எளிய மக்கள் நிம்மதியாக வாழ கூடாது என்று அரசு நினைக்கிறதா? என்று தெரியவில்லை. பால் விலை உயர்வு ஏழை, எளிய மக்களுக்கு விழுந்த பேரிடி. ஏழை, எளிய மக்களை அரசு நினைத்து பார்க்க வேண்டும். இந்த விலை உயர்வை திரும்ப பெற்றால் நன்றாக இருக்கும்.
வில்சன் கார்டன் பகுதியில் வசித்து வரும் மீனா:- இன்று (அதாவது நேற்று) காலை பால் வாங்க சென்ற போது பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்து விட்டதாக கடைக்காரர் கூறினார். ஏற்கனவே கடைக்காரர்கள் பால் பாக்கெட்டுகளை குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாப்பதால் கூடுதலாக ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3 வாங்குகின்றனர். தற்போது ஒரு லிட்டர் பாலை ரூ.2 அதிகரித்து உள்ளனர். இந்த விலை உயர்வு ஏழை, எளிய மக்கள் மீதான நேரடி தாக்குதல். விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக நடுத்தர மக்களின் தலையில் கை வைக்கின்றனர்.
மக்களுக்கு அழுத்தம்
பெங்களூரு ராயபுரம் வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை தலைவர் ரேகா:- கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்தி உத்தரவிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே கொரோனாவால் வேலையை இழந்தவர்கள் வாழ்வாதாரத்தை நடத்த முடியாமல் தவித்தனர். தற்போது தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. மக்கள் மெதுவாக தங்களது சகஜ வாழ்க்கைக்கு திரும்பி வரும் இந்த வேலையில் அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியும், அழுத்தமும் கொடுக்கிறார்கள். பால் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் பால் வாங்க முடியாத நிலை கூட ஏற்படலாம். இதனை அரசு பரிசீலிக்க வேண்டும். பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
ராமசாமிபாளையா வார்டு காங்கிரஸ் தலைவர் கஜேந்திரா:- மக்கள் வாழ்வாதாரத்தை நடத்தவே கஷ்டப்பட்டு வருகின்றனர். தற்போது தேநீர் கடைகளில் ரூ.10 டீ, காபி ரூ.12-க்கு விற்கப்படுகிறது. தற்போது பால் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருப்பதன் மூலம் தேநீர் கடைகளில் இனி டீ, காபி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஒவ்வொரு பால் பாக்கெட்டும் ஒவ்வொரு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் பெயரில் பால் விலையை உயர்த்தி கொள்ளையடிக்க பார்க்கின்றனர். இதனை தடுக்க வேண்டும். மேலும் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
சிக்கமகளூரு டவுன் சக்திநகரில் வசித்து வரும் இல்லத்தரசியான திவ்யா செந்தில்:- பால் லிட்டர் விலை ரூ.2 தான் உயர்த்தப்பட்டு உள்ளது என்று சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. எங்கள் வீட்டில் தினமும் 5 லிட்டர் பால் வாங்குகிறோம். ஒரு லிட்டருக்கு ரூ.2 அதிகரித்தால் 5 லிட்டருக்கு ரூ.10 அதிகரித்து உள்ளது. இதனால் மாதத்திற்கு ரூ.300 பாலுக்கு கூடுதலாக செலவு ஆகிறது. மாத பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எங்களுக்கு இது தேவையற்ற செலவு. பால் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
மதுபான விலை
சிவமொக்கா ஓ.டி. சாலையில் வசித்து வரும் கிருஷ்ணன்:- பால் ஒரு லிட்டர் ரூ.2 உயர்த்தப்பட்டதன் மூலம் மாதம் ரூ.60 கூடுதலாக செலவாகிறது. பால் விலையை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. 2 ஆண்டுகளாக கொரோனாவால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இந்த சூழ்நிலையில் பால் விலையை உயர்த்தியது நிச்சயமாக வரவேற்கத்தக்கது அல்ல. வருமானம் ஈட்ட வேண்டும் என்று அரசு நினைத்தால் மதுபானங்களின் விலையை ஏற்றி கொள்ளலாம்.
மங்களூரு கெஞ்சாடி பகுதியில் வசித்து வரும் செல்வராஜ்:- பால் விலை உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். வருமானம் ஈட்டுவதற்கு அரசுக்கு பல்வேறு வழிகள் உள்ளது. பால் விலையை உயர்த்தி தான் வருமானத்தை பெருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பால் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். பால் விலைக்கு பதிலாக மதுபான விலையை அரசு உயர்த்த வேண்டும்.
சிவமொக்கா புதிய தீர்த்தஹள்ளி சாலை பாரதி காலனியில் வசிக்கும் இல்லத்தரசி புவனேஸ்வரி:- ஏற்கனவே சமையல் கியாஸ் விலை, மின் கட்டணம் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் பால் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வகுப்பினர் கடுமையாக பாதிக்கப்படுகிறோம். ஒரு நாளைக்கு 2 ரூபாய் என்றாலும் மாதத்திற்கு 60 ரூபாய் கூடுதலாக செலுத்துவது கடினம் தான். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துவோர் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து அதுக்கு செலுத்தும் கட்டணங்கள் உயர்ந்து போன நிலையில்
கூடுதலாக இந்த சுமை தேவையற்றது இதனை திரும்ப பெற்றால் பெண்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.