சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு
|சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே கடலில் ரூ.81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா சிலை வைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த சிலை அமைந்துள்ள பகுதிக்கு செல்ல கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும்.
ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த பேனா சிலைக்கு 'கலைஞர் பேனா நினைவுச் சின்னம்' என பெயரிடப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையல் அமையவுள்ள பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் 'கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதால் கடல் வளம் பாதிக்கும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.