சாலையை விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை
|ராபர்ட்சன்பேட்டை-உரிகம்பேட்டை சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராபர்ட்சன்பேட்டை
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை காந்தி சர்க்கிளில் இருந்து உரிகம்பேட்டை வரை செல்லும் சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. இ்ங்கிருந்து உரிகம்பேட்டைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
பொது மக்களின் நடமாட்டமும் அதிக அளவில் உள்ளது. அத்துடன் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் பிரசித்தி பெற்ற காந்தி மார்க்கெட் அமைந்திருக்கிறது. சாலை குறுகலாக இருப்பதால் மக்கள் சாலையில் நடந்து செல்லும்போது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.
இச்சம்பவம் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இதை அறிந்தும் நகரசபை நிர்வாகம் கண்டும், காணாமல் இருப்பது வேதனையாக உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். போலீசாரும் இந்த அவல சம்பங்களை கண்டுகொள்வதில்லை.
இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இத்தகைய குறைகளை போக்க நகரசபை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், அந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.