யரகோல் அணையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
|கோலார் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய யரகோல் அணையின் நீரை பயன்படுத்தவேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்பாசனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கோலார் தங்கவயல்
யரகோல் அணை திட்டம்
கோலார் மாவட்டம் மாலூர் மற்றும் பங்காருபேட்டை தாலுகாவில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் தாலுகா நிர்வாக அதிகாரிகள் மற்றும் நகரசபை நிர்வாக அதிகாரிகளிடம் குடிநீர் பஞ்சத்தை போக்க யரகோல் அணையை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் யரகோல் அணையில் உள்ள நீர் பயனற்று போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகாவில் யரகோல் கிராமத்தில் மார்க்கண்டயன் நதியின் குறுக்கே அணை ஒன்று கட்டப்பட்டது. யரகோல் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளதால் இந்த அணைக்கு யரகோல் என்று பெயரிடப்பட்டது.
அணைகள் கட்டுவதற்கு மட்டும் ரூ.160 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குடிநீர் குழாய், ஆழ்துளை கிணறுகள், தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ரூ.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர் திறக்க கோரிக்கை
இன்னும் இந்த பணிகள் முடியவில்லை என்று கூறப்படுகிறது. 375 கோடி பரப்பளவு கொண்ட இந்த அணையில் 500 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி என்பது 100 கோடி கன அடி) நீரை சேமித்து வைக்க முடியும் என்று கூறப்படுகிறது. அணை முழு கொள்ளளவை எட்டிய பின்னர் தாமாக தண்ணீர் நிரம்பி வழிந்தோடும்.
நிரம்பாவிட்டால் அந்த நீர் தேங்கியே நிற்கும் என்று கூறப்படுகிறது. அணை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வந்து ஒரு ஆண்டுகள் கடந்தும் நீர்பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் இந்த நீர் பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். கோலார் மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த யரகோல் அணையை இதுவரை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டிருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
இதனால் கோலார் மாவட்ட மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை உருவாகியிருக்கிறது. எனவே மாவட்ட, தாலுகா நிர்வாக அதிகாரிகள், நீர்பாசனத்துறையை சேர்ந்தவர்கள் உடனே யரகோல் அணையில் இருந்து கோலார் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.